
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். கம்பீர் தனது விருப்பத்திற்கு ஏற்ப புதிய பயிற்சியாளர் குழுவை அமைத்து, அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராகவும், மோர்னே மோர்கலை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமித்திருந்தார். அதேவேளை, டிராவிட் காலத்தில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி.திலீப் தனது பதவியை தொடர்ந்து வகித்து வந்தார்.
அதன் பின் நெதர்லாந்தின் டென் டஸ்கேட்டை பயிற்சியாளர் குழுவில் இணைத்த கம்பீர், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தோல்வியடைந்ததை அடுத்து, மேலும் ஒரு பேட்டிங் பயிற்சியாளராக ஷசான்சு கோடக்கை நியமித்திருந்தார். ஆனால் தற்போது, அபிஷேக் நாயர், டி.திலீப் மற்றும் உடற்பகுதி மேம்பாட்டு பயிற்சியாளராக இருந்த சோஹம் தேசாய் ஆகிய மூவரும் பயிற்சியாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2025 முடிவடைந்ததும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடர் விளையாடவுள்ளது. இதற்கான தயாரிப்புகளாகவே பயிற்சியாளர் குழுவில் பிசிசிஐ மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும், அணியில் மேலும் சில புதிய நியமனங்களும் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.