புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்தது அவரது நிர்வாக அதிகாரத்தின் கீழான முடிவு என கூறினார். இதனை விமர்சிப்பது சரியானதல்ல என்றும், ஒரு முதலமைச்சருக்கு தனது அமைச்சரவையில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கும் அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். மந்திரி சபை மாற்றம் அல்லது புதிதாக நியமிக்கப்படுவது சாதாரண ஜனநாயக நடைமுறையாகவே இருப்பதாக அவர் கூறினார்.

அதுபோல, இந்திய அரசியலில் குடும்ப அரசியல் என்பது பொதுவானது என்று அவர் குறிப்பிட்டார். கட்சியில் ஒருவர் தலைவராக ஏற்கப்பட்டால், அதனை கட்சிக்கு வெளியே இருக்கும்வர்கள் விமர்சிப்பது பொருத்தமற்றது என்றார். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும், ஒருவர் தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை வகிக்க முடியாது என்றும் விளக்கினார்.

இதேபோல், பாஜக இவ்வகையான வழக்கு போட்டால், யாரும் அமைச்சராக முடியாத நிலை ஏற்படும் என்றார். கூட்டணியிலான ஒற்றுமையை அவர் வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் உறுதியான கூட்டணியில் இருப்பதாகவும், அது தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறினார்.