
திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகமானது 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை திரும்பப்பெற்று போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென்று இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்த பல நிபந்தனைகளோடு அனுமதி வழங்கி இருந்தார்கள்.
இதனை தொடர்ந்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், பாஜகவினர் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மதுரை ரவுண்டான பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்கு ஆளும் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடக்காது. இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழ்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்” என்று பேசி உள்ளார்.