
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு எந்தெந்த வழிகளில் நெருக்கடி கொடுக்க முடியுமா அந்தந்த வழிகளில் அரசு நெருக்கடிகளை கொடுத்துள்ளது. குறிப்பாக இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் வேலைகளை திமுக அரசு செய்து வருகிறது. மத வழிபாட்டு உரிமை என்பது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அரசியலமைப்பை பின்பற்றுவோம் என்று திமுக கூறிவிட்டு தற்போது இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பது கண்டனத்திற்குரியது.
திமுகவுக்கு இந்து மதத்தின் மீதும் இந்து கடவுள்களின் மீதும் வெறுப்பு இருக்கலாம். ஆனால் அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை நினைக்க வேண்டும். பொதுவாக முதல்வர் பதவியில் இருக்கும் ஸ்டாலின் மற்ற மத பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது. முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் பொதுமக்களுக்கு மரியாதை கொடுத்து கண்டிப்பாக வாழ்த்து கூறியிருக்க வேண்டும். மேலும் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய முதல்வர் ஸ்டாலின் இந்த முறையாவது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து கூறியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்