நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற போது ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, பாஜகவினர் வன்முறையாளர்கள் என்றும் அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் கிடையாது என்றும் கூறினார். அதோடு இந்து மதம் என்பது வெறுப்பு, பயம் மற்றும் பொய்களை பரப்பும் மதம் கிடையாது என்றும் கூறினார். அப்போது பிரதமர் மோடி எழுந்து ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என்று கூறினார். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதோடு தேர்தல் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தன்னுடைய உண்மை முகத்தை காட்டிவிட்டது என்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக இந்தியா கூட்டணி வெகு தூரம் சென்று விட்டது என்றும் விமர்சித்துள்ளார். மேலும் இதுபோன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் அண்ணாமலை ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.