
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்ஜெட் தாக்கல் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது வெட்கக்கேடானது. அதன் பிறகு விவசாயம், கல்வி, மருத்துவம் போன்றவைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்காதது நாட்டு மக்களின் மீது உள்ள அக்கறையின்மையை தெளிவாக காட்டுகிறது. தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அன்றாட வாழ்வில் மக்களின் பசியை போக்கும் விவசாயத்திற்கு அளிக்கப்படவில்லை. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை புறக்கணித்து கூட்டணி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் அறிகையில் இருந்து இந்தியாவுக்குள் பாஜகவின் வீழ்ச்சி முழுமையாக தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.