
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்னும் பகுதியில் குணா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பழங்குடியின பெண் ஆவார். இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகனை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் குணா பாய்க்கு ஒரு வீடு கிடைத்தது. குணா பாயும் அவரது மகனும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். அவருடைய வீட்டின் அருகே ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளி மிகவும் பழமையான தோற்றத்துடன் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அப்பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை இருந்த நிலையில் 20-க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாழடைந்த பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் படித்து வருவதை பார்த்த குணா பாய் மனவேதனைக்கு உள்ளானார். இதனால் அவர் தனது வீட்டில் பள்ளிக்கூடம் வைத்துக் கொள்ளுங்கள், அந்த பாழடைந்த பள்ளியில் குழந்தைகள் படிக்க வேண்டாம் என கூறி பள்ளிக்கு தனது வீட்டை தானமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து குணா பாய் தனது மகனுடன் ஒரு ஓலை குடிசையில் குடியேறினார். மேலும் குணா பாய் தனது வீட்டில் குழந்தைகள் படித்து வருவதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.