மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி(34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அழகு பாண்டி மீது அடிதடி, தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

அதே பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை காவலரான நடராஜன்(75) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் மளிகை கடையில் நடத்தி வருகிறார். வழக்கமாக அழகு பாண்டியும், நடராஜனும் ஒன்றாக அமர்ந்து வந்து குடிப்பார்கள்.

அழகு பாண்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டு நடராஜன் தொந்தரவு செய்துள்ளார். இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று அழகுபாண்டி நடராஜன் கடைக்கு சென்று மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.

அப்போது நடராஜன் ஏற்கனவே நிறைய பணம் பாக்கி உள்ளது எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அழகு பாண்டி அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அழகு பாண்டி நடராஜனிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் கோபமடைந்த நடராஜன் அழகு பண்டியை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த அழகு பாண்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் நடராஜன் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த விஷயத்தை கூறி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.