தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்க வழிகாட்டும் நெறிமுறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அரசு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில், 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமும், அதன் 2020 திருத்தச் சட்டத்தும் அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே இவ்வுரிமை வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பிற மொழிகளில் கல்வி பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் அல்லது பள்ளிக்குச் செல்லாமல் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்றவர்கள், இந்த முன்னுரிமைக்கு தகுதியில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றவர்கள் மட்டுமே உரிய சான்றிதழ்கள் அடிப்படையில் இந்த சலுகைக்குத் தகுதியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனம் மூடப்பட்டிருந்தால் மாவட்ட கல்வி அலுவலர்கள் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற புதிய விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வுகளில், நேரடி நியமனங்களுக்கான ஒவ்வொரு கட்டத்திலும் (முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் உள்ளிட்டவை) 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு பதவி வாரியாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கும் முக்கியமான படியாக அரசியல் வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது.