ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயணிகள் வழித்தடத்தில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதச் சம்பவம், இந்தியா முழுவதும் உலகளாவிய ரீதியிலும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக இந்திய உளவுத்துறை குறிப்பிடுகிறது.

பாகிஸ்தான் ஆதரவு உள்ள பயங்கரவாதத்தைத் தடை செய்யும் வகையில், மத்திய அரசு பல அதிரடித் தீர்மானங்களை அறிவித்துள்ளது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுவதுடன், பாகிஸ்தான் குடியரசு பிரஜைகளுக்கான SAARC விசா விலக்கு திட்டம் (SVES) இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சிந்துநதி நீர் ஒப்பந்தத்தையும் மறுஆலோசிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன்  மற்றும் BCCI-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முற்றிலும் முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய பயங்கரவாதச் சம்பவங்கள் நடைபெறுவது வேதனைக்குரியது. இந்தியா, பாகிஸ்தானுடன் உள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்புகளையும் உடனடியாக கைவிட வேண்டும்,” எனக் கூறினார்.