உலக அளவில் தற்போது பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ரஷ்ய நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது தொடர்ந்து சரிவை சந்திப்பதால் புதிதாக பாலியல் அமைச்சகம் ஒன்றை அமைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோன்று இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதாகவும்  இதனால் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் எனவும் சமீபத்தில் கூட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதேபோன்று சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் என்பது குறைந்து வருகிறது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த வருடம் குழந்தை பிறப்பு விகிதம் என்பது 5.1 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்நிலையில் அந்த நாட்டின் கன்சர்வேட்டிங் கட்சி தலைவர் நவோகி கைகுடா ‌ ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது அவர் கடந்த 8-ம் தேதி ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியின் போது 25 வயதிற்குப் பிறகு ‌ பெண்கள் திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டுமென்றார். அதன் பிறகு 30 வயது ஆகிவிட்டால் பெண்களின் கர்ப்பப்பையை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.