சென்னை எழும்பூர் என்னும் பகுதியில் ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் காவல்துறை என்னுடைய துறை என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானே பதக்கம் பெற்றதைப் போல் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ள காவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காவல்துறை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பள்ளி துறை போன்ற பல துறைகளில் பணியாற்றிய காவலர்களுக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கங்களுக்கு பின்னால் இருக்கிற உங்களது உழைப்பு மற்றும் திறமைகளும் தலை வணங்கத்தக்க அம்சமாகும். தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்வதற்கு தமிழ்நாடு காவல்துறைக்கு பெரும் பங்கு இருக்கிறது. அமைதியான மாநிலத்தில் மட்டுமே வளமும் மகிழ்ச்சியும் இருக்கும்.

தமிழ்நாட்டில் சட்ட அமைப்பு ஒழுங்காக இருப்பதால்தான் தொழில் வளர்ச்சி கல்வி வளர்ச்சி போன்றவற்றில் தமிழகம் முன்னிலையாக திகழ்கிறது. காவல்துறையை நவீனமாக்கியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இதைத்தொடர்ந்து காவல்துறையில் மகளிருக்கு வாய்ப்பளித்ததும் அவர்தான். மேலும் அவர் பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு முடிந்தவுடன் பணிக்கு திரும்பும்போது அவர்களுக்கு விருப்பம் உள்ள இடங்களிலேயே பணிகள் வழங்கப்படும் எனவும் அவர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.