தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய இணைப்பு வேண்டி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மின்வாரிய பிரிவு அலுவலர்கள் மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மின்கம்பம் அமைக்க அறுபது நாட்களும், மின் மாற்றிகளை அமைக்க 90 நாட்களும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இருந்தாலும் மின் இணைப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் அதிகப்படியான நாட்களை எடுத்துக் கொள்வதால் நுகர்வோர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய மின் இணைப்பு கேட்டு தற்போது மாநிலம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்  நிலுவையில் உள்ளது. எனவே புதிதாக மின் இணைப்பை 30 நாட்களுக்குள் வழங்குவதற்கு பதிலாக 7 நாட்களுக்குள்ளாகவே வழங்க வேண்டும் எனவும் மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பையும் வழங்கக் கூடாது எனவும் மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.