தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன.

பெண்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2025 ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி மற்றும் ஊதியம் விவரம்: விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை ஆகும். முதலில் ஒரு வருடத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படும். பின்னர் ரூ.3000 முதல் ரூ.9000 வரை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்கள் (10ஆம் வகுப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார், சாதிச் சான்று, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை) இணைத்து, ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நேர்முகத் தேர்வு மூலமாக நடைபெறும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது, அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.