
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 12 மணி வரையில் சென்னையில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ள அபாய எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரத்திற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில் மழை மற்றும் மழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து இன்று இரவு பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் மழை தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.