சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில்  இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள்  விசிக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சராசரியாக 30 முதல் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகின்றது. 100 நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையில் ஆட்களை நீக்கி வருகிறார்கள்.

இது வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு தன்னுடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும். OBC மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாகவும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நிலம் இல்லாத ஏழைகள் வேளாண் திட்டத்தில் பயனடைய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழகத்தின் மீது ஒன்றிய அரசு ஒரவஞ்சனை நிலையை கடைப்பிடித்து வருவதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.