
நமது நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இன்று முதல் மத்திய அரசு மற்றும் மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் இந்தக் கட்டடத்தில் இருந்து நடைபெறும். நாடு முழுவதிலும் இருந்து முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர். 970 கோடியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கட்டடம் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலான நாடாளுமன்றம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான செலவு 970 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பசுமை நாடாளுமன்றமாக காட்சியளிக்கும் புதிய நாடாளுமன்றம் சூரிய மின்சக்தி கட்டமைப்பை கொண்டுள்ளது. நான்கு மாடிகளை கொண்ட கட்டிடத்தில் மக்களவை வளாகம் பிரம்மாண்ட வரவேற்பு ஹாலை கொண்டு இருக்கிறது.
உள்ளே சென்றால் 888 உறுப்பினர்கள் அமரும் வகையிலான மக்களவை தேசிய பறவையான மயில் மாதிரியை பிரதிபலிக்கிறது. இதுவே பழைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும். அதேபோல் மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவில் காட்சியளிக்கிறது. நாடாளுமன்ற மையத் தோட்டத்தில் இந்திய தேசிய மரமான ஆலமரம் உள்ளது. பார்வையாளர் மாடமும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களவை பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டங்களுக்கு என பிரத்தியேக அறைகள் விஸ்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.
மக்களே நாட்டின் அரசர்கள் என்பதை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்ற அரசியலமைப்பு மையத்தில் இந்தியாவின் முதல் அரசியல் அமைப்புச் சட்ட பிரதி காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை பொருட்கள், அலங்கார ஓவியங்கள், சிற்பங்கள் காட்சியகப்படுத்தப்படுகிறது.