உக்ரைனின் ஹார்கிவ், சுமி மற்றும் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 70 பேர் காயமடைந்துள்ளனர் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “இன்று புனித வெள்ளிக்கிழமை ரஷ்யா இப்படித்தான் தொடங்கியது – பாலிஸ்டிக் ஏவுகணைகள், கிரூயிஸ் ஏவுகணைகள், ஷஹேட் ட்ரோன்கள் மூலமாக நமது மக்கள் மற்றும் நகரங்களை நாசமாக்கியது,” என அவர் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் ஐந்து குழந்தைகளும், 2 வயதான வலேரியா என்ற சிறுமியும் உள்ளனர்.

ஹார்கிவ் நகரில் நேரடியாக ஏவுகணை தாக்குதலால் பல குடியிருப்புகள், தொழிற்சாலை, வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமி நகரில் ட்ரோன் தாக்குதலால் பத்து ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு சாதாரண பேக்கரி குறிவைக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்நிப்ரோ, மைகொலைவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

 

உலக நாடுகளின் ஆதரவை கோரியுள்ள ஜெலென்ஸ்கி, “ஒவ்வொரு பாதுகாப்பு உதவியும், ஒவ்வொரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பும் உயிர்களை காக்கும் அளவுக்கு முக்கியமானவை,” எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 13 அன்று சுமி நகரில் நடந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர், இதில் இரண்டு குழந்தைகளும் 84 பேர் காயமடைந்திருந்தனர். இது 2023க்குப் பிறகு உக்ரைன் பொதுமக்களுக்கு எதிரான மிகக் கடுமையான தாக்குதலாகும்.