தேமுதிக கட்சியின் சார்பில் தேனி மாவட்டத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிக 20-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ‌ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக மற்றும் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக ஆகிய கட்சிகள் தான் உண்மையான மக்கள் கட்சி.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சியின் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் 21 இடங்களில் மட்டும் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற 19 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் பலம் தான் வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்த் இருந்தவரை அவரை மீடியாக்கள் கேலியும் கிண்டலும் செய்த நிலையில் அவர் இறந்த பிறகு புகழ்ந்து பேசுகிறார்கள்.

நாங்கள் பணம் வாங்கும் கட்சி என்றும் பேரம் பேசும் கட்சி என்றும் கூறுகிறார்கள். நாங்கள் எப்போதும் யாரிடமும் பணம் வாங்கியதும் இல்லை பேரம் பேசியதும் இல்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு எங்களுடைய சொந்த நிலத்தை வைத்து தான் மாநாடு நடத்தினோம். இன்றுவரை நாங்கள் அப்படித்தான் கட்சி நடத்தி வருகிறோம்.

இனி வரும் காலம் மக்கள் கையில் இருப்பதால் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தால் நிச்சயம் அதிமுக ஆட்சியில் அமரும். இதனை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் மட்டும் ஓகே சொன்னால் நான் தமிழகம் முழுவதும் இறங்கி வேலை பார்க்க தயாராக இருக்கிறேன். கூட்டணி தர்மம் கருதி எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்தால் தமிழகம் முழுவதும் இறங்கி வேலை பார்க்க தயாராக உள்ளேன் என்று விஜய் பிரபாகரன் கூறினார்.