
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.
இப்படியான நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அதிமுக கட்சி சார்பாக சேவல், புறா சின்னத்தில் போட்டியிட்டு கூட நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இந்த முறை தேர்தலில் தோற்பதற்கு அதிமுகவிற்கு இரு சிலர் துரோகத்தை செய்து இருக்கின்றனர். அதனை கவனமாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என பேசி இருக்கிறேன். இந்த கருத்து அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் பேசியபோது கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி பெயரை எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் நீங்கள் பயன்படுத்தாதது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், கழகப் பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று நான் அழுத்தமாக சொல்லி இருக்கிறேன் என்று ஒரே வரியில் பதில் அளித்துச் சென்றார்.