திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இஸ்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணனின் (45). இவரது மகள் பவித்ரா (14) 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பவித்ராவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பவித்ரா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமி இரவில் உயிரிழந்ததையும், அந்த தகவல் பெற்றோருக்கு காலதாமதமாக தெரிவித்ததையும் குற்றமாகக் கூறிய உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் சோளிங்கர் காவல் துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமியின் உடலை சோளிங்கர் அரசு மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனை செய்து உடனடியாக ஒப்படைக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, உறவினர்கள் மறியலை கைவிட்டு விரைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.