
தென்காசி மாவட்டம் சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே 9 வயது மகளுடன் ஒரு பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுமி அவர்கள் மீது மோதினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சார்பு ஆய்வாளர் வரதராஜன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர், சிவகிரியைச் சேர்ந்த 15 வயது சிறுமி என தெரியவந்தது.
இதையடுத்து, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதி வழங்கிய தந்தை குருசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கையளித்து, பெற்றோர் சாலை பாதுகாப்பு விதிகளில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் மீண்டும் நடைபெறுமானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.