
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவர் துரித உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் கிடாரக் குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(21), கருத்தபாண்டி(20), முத்துராமன்(20) மற்றும் ஆம்பூரை சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் கடையில் பணம் கையாடல் தொடர்பான பிரச்சனையில் ஆனந்தகுமார் உள்பட நான்கு பேரையும் சதீஷ் வேலையில் இருந்து நீக்கி விட்டார். அதன் பிறகு வேறு சிலரை பணி அமர்த்தினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென சதீஷின் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உணவகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து சதீஷ் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. சதீஷ் வேலையை விட்டு நீக்கிய ஆனந்தகுமார் உள்பட நான்கு பேரும் உணவகத்திற்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனால் ஆனந்தகுமார், முத்துக்குராமன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.