
கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி மைதிரி நகரில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் டோர் டெலிவரி முறையில் உணவு வினியோகிக்கும் நிறுவனங்களைப் போல செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனை இவர் மிகவும் ரகசியமான முறையில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கனாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருளுக்கு ஆளான சிலர் சிக்கி உள்ளனர். அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் சாந்தியின் செயல் வெளிவந்தது.
இதனை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சாந்தியை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். இதில் அவர் பைக்கில் சென்று டோர் டெலிவரி முறையில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சாந்தியின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டு கழிவறையில் இரண்டு பைகள் நிறைய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் உள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாந்தியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில், போதைப் பொருள்களை பைக்கில் எடுத்துச் சென்று நேரடியாக கொடுப்பதால் 4 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதை சாந்தி ஒப்புக்கொண்டார். அதன் பின் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாந்தியின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.