
சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன்னை பொதுச் செயலாளர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில் எடப்பாடி இன்னும் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.