அரியானா மாநிலத்தில் டிங்கர் கேரி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் விவசாயி மற்றும் அவருடைய மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணம் போன்றவற்றை திருடினர். அதோடு அவர்களுடைய உறவுக்கார பெண்கள் 2 பேரையும் கூட்டு பலாத்காரம் செய்தனர். இதில் 16 வயது சிறுமியும் அடங்குவார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் ஜெய் பக்வான், வினய், அயன் சவுகான், ஹேமத் சவுகான் ஆகியோரை  கைது செய்தனர். இந்த வழக்கு அரியானாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு ரூ. 8.20 லட்சம் அபராதம் விதித்ததோடு, 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்குவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.