
தமிழகத்தில் முன்மொழி கொள்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள ப்ளூ ஸ்டார் பள்ளியில் நிர்வாக குழு தலைவராக செயல்படுவதாகவும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கும் நிலையில் எதற்கு அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை பேசிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக உள்ளது. நாகரீக அணுகுமுறை என்பதை முற்றிலும் தவிர்த்து விட்டு யாரையும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய அணுகுமுறை வியப்பாக உள்ளது. இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. எங்களிடத்தில் ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அதற்கான அனுமதியும் பெறவில்லை வகுப்புகளும் தொடங்கப்படவில்லை. அங்கு இன்னும் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை பெற்று தந்திருக்கலாம். அதை ஏன் அண்ணாமலையால் செய்து கொடுக்க முடியவில்லை என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.