தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் மாரிமுத்து (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக அஞ்சலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் பிரியா (21) என்ற பெண்ணுடன் மாரிமுத்துவுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். கடந்த 6-ம் தேதி இரவு மாரிமுத்து அவருடைய மனைவி மற்றும் அவருடைய முதல் மனைவியின் சகோதரர் மணிகண்டன் (24) ஆகியோர் வீட்டில் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய் தகறாறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரியா மற்றும் மணிகண்டன் இருவரும் அருகே கிடந்த அரிவாளால் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அதன்பின் அவரை அருகில் உள்ள ஒரு தோப்பில் குழி தோண்டி புதைத்து விட்டனர். இந்நிலையில் தன்னுடைய மகனை காணாததால் மாரிமுத்துவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வரவே பிரியா மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.