ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா ஒரு பல் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்த நிலையில் அடிக்கடி செல்போனில் ஒரு வாலிபருடன் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக சரண்யா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு காவல்துறையினர் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமரசமாக பேசி அனுப்பி வைத்தனர். இருப்பினும் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படவே சரண்யா தன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்து வாழுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் சரண்யா அந்த வாலிபருடன் பேசுவதற்காக இரவில் தன் தந்தை வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றுள்ளார்.

இதை பன்னீர்செல்வம் பலமுறை கண்டித்தும் சரண்யா கேட்கவில்லை. இதனால் கடந்த 3ஆம் தேதி ‌ தந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரண்யாவை மது போதையில் இருந்த பன்னீர்செல்வம் கத்தியால் சரமாறியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த பன்னீர்செல்வம் தன் மனைவியை கொலை செய்த அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு  தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு தன் தந்தையை காணாததால் சிறுமி வெளியே வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிடவே உறவினர்கள் உடனடியாக வந்து  பன்னீர் செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில்  ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சரண்யா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வரவே அவருடைய சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரண்யா வேலை பார்த்த இடத்தில் வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இந்த வாலிபரை தற்போது காவல்துறையினர் தேடி வரும் நிலையில் அவர் பிடிபட்டால் தான் உண்மை நிலை என்னவென்று தெரியவரும் என கூறியுள்ளனர்.