
ஒட்டப்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 12 நாட்களாகவே இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்துள்ளன. இதனால் பயந்து போன மக்கள் இரவு முழுவதுமே அங்குள்ள கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கும்போது கற்கள் விழவில்லை. ஆனால் உள்ளே சென்றதும் ஓடுகள் மீது கற்கள் விழுந்துள்ளது. இதனால் மர்ம நபர்களின் செயலாக இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் எண்ணியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த பகுதி இளைஞர்கள் கிராமம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். ஆனால் அப்படி யாருமே சிக்கவில்லை. இதனால் வீடுகளின் மீது கற்கள் எப்படி விழுகிறது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மேலும் இது குட்டி சாத்தானின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வீடுகளின் மீது விழுந்த கற்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த கிராமம் முழுவதும் ஆறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 20 போக்கஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு முதல் காலை வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது எந்தவித கற்களும் வீடுகளின் மீது வந்து விழவில்லை. எனவே மர்ம நபர்கள் மறைவான இடங்களில் பதுங்கி இருந்து கற்களை வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.