
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பள்ளி சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இது தொடர்பாக பேசி உள்ள மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன், கரூர் மாவட்டம் தரகம்பட்டி கிராமத்தில் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் தன்னுடைய இரும்பு கரங்கள் கொண்டு ஒடுக்குவதாக கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும் இந்த சமுதாயத்திற்கும் எந்த வகையில் ஆறுதல் சொல்ல போகின்றார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தன்னுடைய துறையில் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் குற்றங்களை பற்றி அக்கறை இல்லாமல் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் களமாடி கொண்டிருப்பது வேதனையின் உச்சம். கரூர் சம்பவத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு குற்றத்தில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.