
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபுல்ஹசன். இவரது மனைவி ராபியா. இந்த தம்பதிக்கு மூன்று மற்றும் ஆறு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராபியா 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தனது கணவனிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
மனைவி மற்றும் குழந்தைகளை காணாத அபுல்ஹசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் கிடைத்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து ஹசனின் மனைவி மற்றும் குழந்தைகளாக இருக்கக் கூடும் என்று சந்தேகித்த போலீசார் அவரையும் அடையாளம் காட்ட அழைத்துச் சென்றனர். அபுல் ஹசன் இறந்த பெண் மற்றும் குழந்தைகளை தனது மனைவி மற்றும் குழந்தைகள்தான் என அடையாளம் காட்டினார்.
இதனை தொடர்ந்து சடலங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அபுல்ஹசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் சடலம் என்று வாங்கி வந்து இறுதி சடங்கையும் நிறைவேற்றி புதைத்து விட்டார். இந்நிலையில் சமீபத்தில் காவல்துறையினருக்கு வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அபுல்ஹசனின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதை எடுத்து விசாரணை மேற்கொண்ட போது குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ராபியா நிதி நெருக்கடியால் மீண்டும் குழந்தைகளுடன் கணவன் வீட்டிற்கு வந்துவிட்டது தெரியவந்துள்ளது.
இதனால் அபுல்ஹசன் அடையாளம் கூறி வாங்கிய மூன்று சடலங்கள் யாருடையது என போலீசார் குழம்பி போய் உள்ளனர். எனவே தற்போது அந்த மூன்று சடலங்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க விளம்பரங்களை கொடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.