கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

எட்டு வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளார். கோவை சின்ன வேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் திவ்யா தம்பதியினரின் மகள் யாழினி. 8 வயதான யாழினி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சகசங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் பயிற்சியாளர் சென்ட்ரிக் ஆலோசனை பேரில் யாழினிகை சிகரத்திற்கு அழைத்து சென்றனர்.

எட்டு பேர் கொண்ட குழுவில் எட்டு வயது மட்டுமே ஆன சிறுமி தனது உறுதியான துணிவால் அவர்களுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 12 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தில் 17,357 அடி உயரத்தில் அமைந்துள்ள பேஸ் கேம்ப் என்னும் அடிப்படை முகாமை சிறுமி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கோவை திரும்பிய யாழினியை அவரது பெற்றோர் உற்சாகமாக வரவேற்றனர். இதுகுறித்து சிறுமியின் தாய் திவ்யா கூறும் போது தமிழ்நாட்டில் இருந்து சென்று பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று யாழினி சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தை 12 நாட்களில் சிறுமி கடந்துள்ளார்.