அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். இவர் சமீபத்தில் நடந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

அதன் பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் அனைவரின் பெயர்களையும் சொன்ன செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை மட்டும் சொல்லவில்லை. இதன் காரணமாக அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேபி முனுசாமி, செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியுடன் இருப்பது பற்றி பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அவருக்கு ஜெயலலிதா எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தாரோ அதே அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமியும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார். ஈரோடு முத்துசாமி போல இல்லாமல் கடைசிவரை அதிமுகவுக்கு உறுதுணையாக செங்கோட்டையன் இருப்பார் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஈரோடு முத்துசாமி தற்போது அமைச்சராக இருக்கும் நிலையில் அவரைப் போன்று அதிமுகவிலிருந்து விலகாமல் கடைசிவரைஅதிமுகவில் செங்கோட்டையன் நீடிப்பார் என்று தான் நம்புவதாக தற்போது கேபி முனுசாமி கூறியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.