
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற ‘விரைவில் முடி வளரும் அதிசயம்’ என்ற பெயரில் நடைபெற்ற ஒரு தனியார் முகாம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முடி உதிர்தலுக்கு தீர்வு என்ற பெயரில் நடைபெற்ற இலவச முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு ஒரு எண்ணெய் வழங்கப்பட்டு, அதைத் தேய்த்து கழுவும் போது முடி வளரும் என உறுதி கூறப்பட்டது. இதை நம்பிய பலர் எண்ணெயைப் பயன்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram
ஆனால், முகாமுக்குச் சென்றதையடுத்து, எண்ணெயை பயன்படுத்திய 65 பேருக்கு கண்களில் எரிச்சல், சிவத்தல், மற்றும் வலிகள் ஏற்பட்டதால் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குவிந்தனர். இந்த விவகாரத்தில் சங்ரூரில் உள்ள சுக்வீர் சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில், மருந்து சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகளின் கீழ் இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தேஜிந்தர் பால் சிங் மற்றும் முடி திருத்தும் நிபுணர் அமர்தீப் சிங் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த முகாம் நடத்த காவல்துறையிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை என்பதும், அனுமதி இல்லாமல் நடத்தியதற்காக மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.