
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தந்தையின் ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணம் செய்வதற்காக “சங்கம்” என்ற திருமண செயலியில் பதிவு செய்தார். அப்போது “ஸ்ரீ ஹரிணி” என்ற பெயரில் ஒரு பெண், திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக பழகத் தொடங்கினார். நாளடைவில் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்வார் என நம்பிய இளைஞர், தனது அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் அவரிடம் பகிர்ந்துள்ளார்.
பின்னர், அந்த பெண் அறிமுகப்படுத்திய ஐ.டி-யில் இருந்து பேசிய நபர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். இதனால் ₹88 லட்சம் வரை அந்த நபர் கூறிய லிங்கில் பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த இளைஞர், மொத்தம் 25 முறை, சிட்டி யூனியன் வங்கியில் உள்ள லட்சுமி மற்றும் ஆனந்தி என்ற இருவரின் கணக்குகளில் பணம் அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் இருவரும் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்பதும், அவர்களின் கணக்குகளை மோசடிக்காக பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஈரோடு பகுதியைச் சேர்ந்த யுவராஜன் (33), கோவையிலுள்ள பத்மநாபன் (32), சிவா மற்றும் நந்தகோபால் (30) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ₹4 லட்சம் ரொக்கம், 6 செல்போன்கள், 29 டெபிட் கார்டுகள், 18 காசோலைகள், 12 வங்கி பாஸ்புக்குகள் மற்றும் 46 சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இணையதளத்தினூடாக நடைபெறும் இந்தவகை மோசடிகளை தடுக்கும் நோக்கில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.