தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் ஏர்போர்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக உங்களுடைய மண்ணுக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய போராட்டத்துக்கு நான் எப்போதும் உறுதுணையாக நின்று சட்டப்படி அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுப்பேன். பரந்தூரில் ஏர்போர்ட் அமைப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது இடத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிராகவும் தற்போது இருக்கும் ஆளும் அரசு செயல்படுகிறது.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பரந்தூரில் மட்டும் எடுக்காதது ஏன்.? நான் உங்கள் எல்லோருடனும் நிற்பேன். என்னுடைய முதல் அரசியல் கள பயணத்தை பரந்தூரிலிருந்து தொடங்கியுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதேபோன்று நம்முடைய நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள். அந்த விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு வணங்கி என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்று இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என்று எனக்கு தோன்றியது. உங்களுடைய வீட்டில் உள்ள ஒரு மகனாக என்னுடைய கலா அரசியல் பயணம் உங்கள் ஆசிர்வாதத்தோடு தொடங்கியது. பரந்தூரில் விமான நிலையத்தை தாண்டி வேறு ஏதோ ஒரு லாபத்துக்காக தான் ஆளும் கட்சி செயல்படுகிறது என்று கூறினார். மேலும் நடிகர் விஜய்க்கு விவசாயிகள் நெற்பயிரை பரிசாக கொடுத்து விவசாய துண்டை அவருக்கு அணிவித்தனர்.