
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த ஸ்ரீதர் (29) மற்றும் பெங்களூரில் பணியாற்றும் அனுசியா (29) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரு குடும்பங்களும் இந்தக் காதலை ஏற்று, கடந்த 15ம் தேதி திருத்தணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அவர்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால், திருமண விழாவில் தாலி கட்டவிருந்த நேரத்தில், மணமகன் ஸ்ரீதர் திடீரென மண்டபத்திலிருந்து மாயமானார்.
மணமகனின் மாயம் அனுசியாவின் வீட்டாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அனுசியா, தனது காதலர் சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்து மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருத்தணி போலீசார், புகாரின் பேரில் விசாரணை நடத்தி, 4 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து ஸ்ரீதரை கண்டுபிடித்து திருத்தணிக்கு அழைத்து வந்தனர்.
டிஎஸ்பி கந்தனின் முன்னிலையில், இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீதர் மற்றும் அனுசியா திருமணம் செய்ய சம்மதித்தனர். காவல்துறையினர் இருவரையும் தங்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், மறுநாளே ஸ்ரீதர் மீண்டும் மாயமானார், இது அனுசியாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும், அனுசியா டிஎஸ்பி அலுவலகத்தில் வந்து, தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டுமென, அல்லது அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
காதலனுடன் திருமணம் செய்ய 16 நாட்களாக போராடி வரும் அனுசியாவின் இந்த விவகாரம், திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாலிபருக்கு திருமணத்தில் சம்மதம் இல்லாததால் அவர் அங்கிருந்து ஓடியதாக கூறப்படுகிறது.