கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகூர் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகிறார்கள். இவர்களின் 5 மாத ஆண் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். அதன்படி கடந்த 10-ம் தேதி மாலை ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தை பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதனை ஜான் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்புலன்ஸ் வேகமாக சென்று கொண்டிருந்த போது பெங்களூருவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றினை முந்தி சென்றார்.

அப்போது காரில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து வந்தனர். அந்த இளைஞர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்தனர். அப்போது 5 மாத குழந்தை உயிருக்கு போராடுவதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் வழிவிட வேண்டும் எனவும் ஓட்டுனர் கெஞ்சி கேட்டுக்கொண்டார். இருப்பினும் மது போதையில் இருந்து அவர்கள் அதைக் கேட்காமல் ரகளையில் ஈடுபட்டனர். அதோடு அவர்கள் ஜானை சரமாரியாக தாக்கினார். உடனடியாக பகுதியில் இருந்த காவல்துறையினர் வாலிபர்களை பிடித்து ஆம்புலன்ஸை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர்.