
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கிஷன் லால் சாஹூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணு சாஹூ என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராணு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 2 வருடங்கள் ராணு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென அவருடைய மாமியார் மகனை விட்டுப் பிரித்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே அவரை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்துள்ளார். தன் மருமகளை அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் பார்க்க மாமியார் அனுமதிக்காத நிலையில் திடீரென ராணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் எலும்பும் தோலுமாக மாறி சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதை அறிந்த அவருடைய தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்ததோடு தன் மகளை கணவர் மற்றும் மாமியார் கொடுமையில் இருந்து மீட்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ராணுவின் உடம்பில் தோல் தெரியாத அளவுக்கு எலும்பாக காணப்பட்டார். அவரின் நிலையை பார்த்து போலீசாரே ஆடிப் போய்விட்டனர். அந்தப் பெண் பேசும் நிலையில் கூட இல்லை. மேலும் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.