தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென போலீஸ்காரர்களை தாக்கினார். அதில் ஒருவர் தங்கதுரையை விரட்டி விரட்டி வெட்டினார். அவர் ஒரு டீக்கடைக்குள் நுழைந்து தப்பித்தார். அதன் பிறகு அவர்கள் போலீஸ்காரர்களின் பைக்கை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த தங்கதுரையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த இரு நாட்களுக்கு முன்பாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த நவீன், கஜேந்திரா, பெர்லின் மற்றும் மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரூ‌.2 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தன்னுடைய தம்பிகள் கைது செய்யப்பட்டதை தெரிந்து கொண்ட கல்யாணசுந்தரம் காவல் நிலையத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் கோபத்தில் இருந்த கல்யாணசுந்தரம் தன்னுடைய நண்பரான நிர்மல் குமார் என்பவருடன்  சேர்ந்து போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.