
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மனோஜ்(27). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியாக மனோஜின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வந்த மனோஜ் நேற்று காலை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தார். அப்போது மனோஜ் தனது இரண்டு நண்பர்களுடன் டி.டி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் இவர்கள் மீது மோதியது.அதில் மனோஜ் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் கீழே விழுந்தனர்.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலிடம் இருந்து மனோஜ் தப்பி ஓடினார். ஆனால் அவரை விடாது துரத்தி ஓட ஓட விரட்டி வெட்டினர். அதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு நண்பர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சேர்வார் ஊரணியைச் சேர்ந்த குருபாண்டி(23), விக்னேஸ்வரன் மற்றும் சக்திவேல் ஆகியோரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான குருபாண்டி இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த 2021 ஆம் ஆண்டு குருபாண்டியின் தந்தை லட்சுமணன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்பாக மனோஜை முக்கிய குற்றவாளி என நினைத்து அவரை பழி தீர்க்கும் வகையில் குரு பாண்டியும் அவரது உறவினர்களும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.