
கிருஷ்ணகிரி மாவட்டம் வீராணம் கோழிபண்ணை பேருந்து நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் மையம் அமைந்துள்ளது. இங்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கூறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிளீனிக்கில் ஆய்வு நடத்தினார். அப்போது 3 பெண்களுக்கு கருவில் உள்ள பாலினத்தை அறிய தலா 1000 ரூபாய் வசூலித்தது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து ஸ்கேன் மெஷினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 5 இடைத்தரகர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் விதிமுறைகளை மீறி ஸ்கேன் சென்டர் நடத்திய அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி, உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர் அம்பிகா ஆகிய மூன்று பேரை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.