
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு ஜூன் 2-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் தனக்கு உடல்நல பிரச்சினைகள் இருப்பதாலும், தன்னுடைய உடல் எடை 7 கிலோ வரை குறைந்து விட்டதாலும், சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும் ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு பாஜக சார்பில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கெஜ்ரிவால் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக உடல்நல பிரச்சனைகளை காரணம் காட்டி நாடகமாடுகிறார். அதனால்தான் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்துள்ளோம். இந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் எந்த மருத்துவமனைக்கு செல்ல விரும்புகிறாரோ அங்கு சென்று சில மணி நேரங்களில் பரிசோதனைகளை எடுத்து முடிக்கட்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாஜக சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.