
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்காக வெளியே அழைத்துச் சென்ற போது உடற்பயிற்சி ஆசிரியர் அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இனி பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது மாவட்ட முதன்மை கல்வி செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் என்ற அறிவிக்கப்பட்டதோடு பெற்றோரிடம் எழுத்து பூர்வ கையெழுத்து வாங்கிய பிறகுதான் அவர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது பெயர் கெட்டுவிடும் என்பதால் பாலியல் தொல்லை போன்ற பிரச்சினைகளை பள்ளிகள் மூடி மறைக்கக் கூடாது. பள்ளி நிர்வாகங்கள் இதுபோன்ற சம்பவங்களை மூடி மறைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு மாணவர்கள் 1417, 1098 என்ற தொலைபேசி நம்பர்களில் அச்சமில்லாமல் பாலியல் புகார் குறித்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் பள்ளியிலிருந்து குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது பெற்றோரின் அனுமதி பெறுவது அவசியம் என்றும் அறிவித்துள்ளார்.