அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, “திமுக ஆட்சியின் பெரும்பாலான துறைகள் ஊழலில் சிக்கியுள்ளன. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்தகைய ஊழல் நடவடிக்கைகளை மக்களின் முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். திமுக அரசு சரிவர செயல்படாததால்தான், கொஞ்சம் அதிகமாக பெய்த மழைக்கே பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

“திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று தெரிவித்தார்கள். ஆனால், கொஞ்சம் மழைக்கும் வடிகால் முழுமையாக செயல்படவில்லை. 98 சதவீதம் பணிகள் நிறைவேறியது என்ற திமுகவின் வாக்குறுதியானது, மக்களுக்கு  உண்மை அல்ல என்று தெரிந்துவிட்டது” என்றார்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் 36,000 போராட்டங்கள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு கட்சிக்கும் தகுந்த உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கே உரிமை கிடைக்கவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான உரிமை வழங்கப்பட்டது. உதயநிதிக்கு 46 வயதே ஆகிறது. எனக்கு 50 ஆண்டுகளாக அரசியல் அனுபவம் உள்ளது. நான் வாரிசு அடிப்படையில் அரசியலுக்கு வரவில்லை, என் உழைப்பின் பலனாக பதவி கிடைத்தது என்று அவர் தெரிவித்தார்.