பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி(70). அதே கிராமத்தில் ருக்மணியின் உறவினரான பெருமாள்-கமலக்கண்ணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் மோகன் திருச்சி கோட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் மோகன் அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைப்பதற்காக மோகனும் அவரது தாய் கமலக்கண்ணியும் சேர்ந்து ருக்மணியிடம் பணம் கேட்டனர். அதற்கு ருக்மணி தன்னிடம் பணம் இல்லை என கூறினார். அப்போது உங்களிடம் இருக்கும் நகையை கொடுத்தால் அடகு வைத்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் கடனை செலுத்தி விடுவேன். அதன் பிறகு உங்களது நகையை மீட்டு தருகிறேன் என மோகன் கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த 2021-ஆம் ஆண்டு ருக்மணி சுமார் 15 பவுன் தங்க நகையை மோகனிடம் கொடுத்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளாகியும் அந்த நகையை மீட்டு கொடுக்கவில்லை. இந்நிலையில் ருக்மணி நகையை திருப்பி தருமாறு கமலக்கண்ணி மற்றும் மோகனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் ருக்மணியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ருக்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கமலகண்ணியையும், மோகனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.