
கோழிக்கோடு அருகே கருவிசேரியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் சிறுவயதிலிருந்தே உறுதியான நண்பர்களாக இருந்தனர். 50 வயதான ஜெயராஜ், 45 வயதான மகேஷ் ஆகியோர் கோவையில் பேக்கரி ஒன்றை இணைந்து நடத்தி வந்தனர்.
துடியலூர் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு சேர்ந்து தங்கியும், தினமும் பேக்கரியில் பணியாற்றியும் வந்தனர். ஆனால் இந்த நீண்ட நட்பு, ஒரு காதலின் காரணமாக கொடூர முடிவை எட்டியது.
சமீபத்தில் மகேஷ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அந்த பெண்ணை ஜெயராஜ் ஏற்க முடியாமல், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
மகேஷ், தனது மனைவியை துடியலூருக்கு அழைத்து வந்து தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்றும், அதற்காக வீட்டிற்கும் தேவையான பொருட்களுக்கும் பணம் தேவை என்றும் ஜெயராஜிடம் கேட்டுள்ளார். இதனால் ஜெயராஜுக்கும், மகேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறின் போது, கோபத்தில் திளைத்த ஜெயராஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகேஷின் கழுத்தில் வெட்டி கொலை செய்தார்.
அதன் பின்னர், தன்னால் விலக முடியாத தவறு ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்த ஜெயராஜ், அதே அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சம்பவம் குறித்து பேக்கரி ஊழியர்கள் சந்தேகம் கொண்டு வீட்டிற்கு சென்று கதவை உடைத்த பிறகு இருவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.