
சென்னை மாவட்டம் ஓட்டேரியைச் சேர்ந்தவர் அக்பர். இவர் சிக்கன் டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்பர் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற குறி சொல்லும் பெண்ணிடம் தனது எதிர்காலம் குறித்து அக்பர் கேட்டார். அப்போது அந்த பெண் அக்பரிடம் உனது மனைவி உனக்கு செய்வினை வைத்துள்ளார். அதனை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி அக்பரிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் 1.5 பவுன் தங்க நகை ஆகியவற்றை அந்த பெண் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து அக்பரின் கண்முன்னே அந்த பெண் பணம் மற்றும் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு மந்திரம் செய்து நான் சொல்லும் போது தான் டப்பாவை திறக்க வேண்டும் என கூறி அவரிடம் கொடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சந்தேகத்தின் பேரில் அக்பர் அந்த டப்பாவை திறந்து பார்த்தபோது நகை பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அக்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம், 1.5 பவுன் தங்க நகை ஆகியவற்றை மீட்டனர்.