ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானை பாடம் கற்றுக்கொடுக்க இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கான முதல் கட்டமாக, இரு நாடுகளின் முக்கிய வர்த்தக எல்லையான அட்டாரி-வாகா எல்லைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியா தற்போது பாகிஸ்தானுடன் உள்ள அனைத்து உறவுகளையும் முற்றிலும் துண்டிப்பதை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் நிறுத்தப்பட்டால், சில பொருட்களின் விலை இந்தியாவில் உயர வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியா அதிக அளவில் முந்திரிப்பருப்பு, பிஸ்தா, பழங்கள் போன்ற உலர் பழங்களை இறக்குமதி செய்கிறது.

இருப்பினும், இந்த உலர்ந்த பழங்கள் மற்ற நாடுகளிலிருந்தும் வாங்கப்படுவதால் தாக்கம் குறைவாக இருக்கலாம். அதே சமயம், இந்தியா பாகிஸ்தானிலிருந்து மட்டுமே வாங்கும் உப்பு (சிறப்பு நோன்பு உப்பு) விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், கணினிக்கண்ணாடி வகை லென்ஸ்கள், சில கட்டுமானப் பொருட்கள், பருத்தி, எஃகு பொருட்கள், மேல் நிலை வேதியியல் பொருட்கள் போன்றவற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் என்பதால் சில தற்காலிக பாதிப்புகள் ஏற்படலாம்.

எனினும், வர்த்தகம் முற்றிலும் முடிந்தால் அதனால் பாகிஸ்தானே அதிகம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் சிரமப்படுகின்ற பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பருத்தி, காய்கறிகள், பழங்கள், தேநீர், காபி, மருத்துவப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பால் மற்றும் மாட்டுத் தீவன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தேவைப் பொருட்களை இறக்குமதி செய்து வந்தது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மேலும் பெரிய அதிர்வுகளை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.